என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாமிரபரணி புஷ்கர விழா"
செய்துங்கநல்லூர்:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டார். அவர் தாமிரபரணியில் புனித நீராடி கைசலாநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நதியின் புனிதத்தை உணர்ந்து இந்த பகுதியில் அதிகமானோர் நீராடுகின்றனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் புஷ்கர விழா நடந்தாலும் சரி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, பொதுமக்களின் ஊக்கமும், அரசு சார்பிலும் இந்த பகுதியில் சாலை வசதிகளும், உடைமாற்றும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
முறப்பநாட்டிற்கு இந்த விழா மிகப்பெரிய நிகழ்வு. தற்போது தான் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து இந்த பணிகள் நடந்து வரும். பொதுமக்களாகிய நாமும் அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். குடித்து விட்டு பாட்டில்களை ஆற்றில் வீசுவது, உடைகளை ஆற்றில் விடுவது, பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் விடுவது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும்.
இயற்கை வளங்களை பாதுகாப்பது மக்களின் கடமையாகும். அரசும் மக்களோடு மக்களாக இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும். சீமைக்கருவேலமரங்கள் முன்னொரு காலத்தில் தொழிலாக இருந்தது.
ரஷ்யா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு இது பயன்பட்டது. மேலும் அடுப்பு எரிப்பதற்கும் பயன்பட்டது. தற்போது அதற்கு மதிப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கருவேல மரங்களை அகற்றும் பணியை துரிதமாக அரசு மேற்கொள்ள வேண்டும்.
புஷ்கரவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புஷ்கர விழா இறைவனுக்காக கொண்டாடப்படுவது. அரசு அதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தாலே போதும்.
ஆகமவிதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்கின்ற எந்தவித ஸ்தலமாக இருந்தாலும் சரி ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கின்ற பாரம்பரியத்தையும் நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும்.
சபரிமலை விவகாரத்தில் இதை உடைக்கின்ற மாதிரி இந்த தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82627), நாளை(புதன்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லை-தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில்(82628), வரும் 20-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பாதுகாப்பு கருதி சில படித்துறைகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நீராட அனுமதி வழங்கப்படாத படித்துறையில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.
இன்று நடந்த அந்த பரிதாப சம்பவம் பற்றி விபரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரெங்கநாதன் தனது மனைவி பிச்சம்மாள் மற்றும் 2 மகன்களுடன் சுவாமி தரிசனம் செய்ய திருச்செந்தூருக்கு பஸ்சில் வந்தார். அந்த பஸ் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு வந்தபோது புஷ்கர விழா நடப்பதால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க ரெங்கநாதன் முடிவு செய்தார்.
அதன்படி ஆத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது மனைவி மற்றும் மகன்களுடன் அரசமரத்தடி படித்துறைக்கு சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரது மூத்த மகனான அமுத சுகந்தன் (வயது 11) திடீரென தண்ணீரில் மூழ்கினான்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த சிறுவனை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவனை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சிறுவன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாமிரபரணியில் புனித நீராடிய சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழா இன்று(11-ந் தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வந்தன.
தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையின் பூங்குளத்தில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் புஷ்கர விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கர விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு ஆரத்தி, மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், பொங்கலிடுதல், சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன் மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், வண்ணார் பேட்டை, எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயுதீர்த்தம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணிக்கு மஹா ஆரத்தி வழிபாடுகள் நடக்கின்றன.
பாபநாசத்தில் துறவியர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து துறவியர்கள் மாநாட்டையும் கவர்னர் தொடங்கி வைத்தார்.
பாபநாசம், வி.கே.புரம் சித்தர்கள் கோட்டம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக 28-வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் இன்று புஷ்கர விழா தொடங்கியது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 54 ஓமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் ஓமம் வளர்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். இன்று காலை அங்கு தசமகாவித்யா ஓமம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். கோசாலையில் வழிபாடு நடத்தும் அவர் தொடர்ந்து அங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் காசியில் கங்கைக்கு நடைபெறுவது போன்று நடத்தப்படும் மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார்.
காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத மூலாம் நாயசர் வஞ்ய பீடம் சார்பாக புடார்ச்சன சேத்திரம் எனப்படும் திருப்புடைமருதூரில் தாமிரபரணி புஷ்கர விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.
நெல்லை தைப்பூச படித்துறையில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் தாமிரபரணி மகா புஷ்கரவிழா தொடங்கியது. தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இங்கும் மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெறுகிறது.
தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் ஆழமான பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் பக்தர்கள் நீராடும் போது பாதுகாப்புக்காக படகுகளுடன் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பாபநாசம், வீரவநல்லூர், அத்தாள நல்லூர், திருப்புடைமருதூர் மற்றும் முறப்பநாடு, ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில் மூலம் வருபவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக நெல்லை ரெயில் நிலையத்தில தமிழக சுற்றுலாதுறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரி நேரடி மேற்பார்வையில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் நெல்லை அருண்சக்திகுமார், தூத்துக்குடி முரளி ரம்பா, நெல்லை மாநகர கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் ஆகியோர் ஏற்பாட்டில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாமிரபரணி நதியில் உள்ள படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் 13 நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
நெல்லையில் விழா நடைபெறும் இடங்களில் மாநகராட்சி சார்பாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #Pushkaram #ThamirabaraniMahaPushkaram
தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8.50 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. கபில்குமார்சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் தென்காசி டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்.டி.ஓ.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு கவர்னரை வரவேற்றனர். இதை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றாலத்துக்கு சென்றார்.
இதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை வந்தார். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார். மாலை 5.15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு செல்கிறார்.
அங்கு கோசாலையை பார்வையிட்டு அங்குள்ள யாகசாலையில் நடைபெறும் சிறப்பு யாகத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் அங்குள்ள ஜடாயுதீர்த்த படித்துறையில் தாமிரபரணி மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார். பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்புடைமருதூர் செல்கிறார்.
அங்கு நடைபெறும் புஷ்கர விழாவில் அவர் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் நெல்லை வந்து வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரிஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டது.
இந்த நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு 12 ரதங்களில் வைத்து முக்கிய மாவட்டங்களில் பொது மக்கள் சிறப்பு பூஜைக்காக சுற்றி வந்தது. இந்த ரதம் இன்று மாலை சங்கர் நகர் கொண்டு வரப்படுகிறது. அங்கு பா.ஜ.க., மடாதிபதிகள், புஷ்கர விழா குழுவினர் வரவேற்கின்றனர்.
பின்னர் இது நெல்லை, பாளை மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது. இதனை தொடர்ந்து நாளை காலை பாபநாசம் கொண்டு செல்லப்பட்டு புனிதநீரை தாமிரபரணி ஆற்றில் விட்டு அபிஷேகம் செய்கின்றனர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.
இந்த விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.
நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.
பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். புஷ்கர விழாவுக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை(புதன்கிழமை) கார் மூலமாக குற்றாலத்துக்கு வருகிறார். அங்கு இரவில் தங்கும் அவர் 11-ந் தேதி காலையில் பாபநாசம் செல்கிறார்.
அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் அங்கிருந்து திருப்புடைமருதூருக்கு சென்றுவிட்டு மதியம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மாலையில் நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக்கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது.
சிறப்பு வேத பண்டிதர்களும் வருகிறார்கள். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகின்றன. விழாவின்போது தாமிரபரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப்பட்டுள்ளன.
புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் கடந்த 6-ந்தேதி இரவு நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் கடந்த 2 நாட்களாக நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பாபநாசம் படித்துறைகள், அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், நெல்லையில் உள்ள படித்துறைகள் தொடர்பாகவும் போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், புஷ்கர விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதியாக ஆற்றுக்குள் பாதுகாப்பு வளையம் அமைக்க உத்தரவிட்டார்.
ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய்துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டார். புஷ்கர விழாவுக்காக மாநகரில் 600 போலீசார் மாவட்டத்தில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 1500 போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. #ThamirabaraniMahaPushkaram #BanwarilalPurohit
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்